search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை பக்தர்கள் நேபாளத்தில் தவிப்பு"

    சென்னையில் இருந்து கைலாஷ் மானசரோவருக்கு யாத்திரை சென்ற 19 பேர் கனமழையின் காரணமாக நேபாளத்தில் சிக்கி தவிக்கிறார்கள்.
    சென்னை:

    இமயமலையில் உள்ள கைலாஷ் மானசரோவருக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் நேபாள நாட்டின் வழியாக புனித யாத்திரை செல்கிறார்கள். நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான மழை பெய்து வருகிறது.

    இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இருந்து கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற 1,300 பக்தர்களில் பெரும்பாலானோர் சிமிகோட் என்ற இடத்தில் மழையில் சிக்கி தவிக்கிறார்கள். மழையின் காரணமாக பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இருக்கிறது.

    சென்னையில் இருந்து கடந்த மாதம் 20-ந் தேதி கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை சென்ற 23 பேரில் 4 பேர் கடந்த 30-ந் தேதி சென்னை திரும்பி விட்டனர். தீனதயாளன் என்பவர் உள்பட மற்ற 19 பேர் அங்கு மழை மற்றும் கடும் குளிரில் சிக்கி, ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். அவர்களில் முன்னாள் எம்.எல்.ஏ. காயத்ரிதேவியும் ஒருவர் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

    சீனா-நேபாளம் எல்லையில் உள்ள ஹில்சா என்ற இடத்தில் தாங்கள் சிக்கி தவிப்பதாகவும், தங்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    சுமார் 400 பேர் காட்மாண்டு விமானநிலையத்தில் சிக்கி தவிக்கிறார்கள்.

    யாத்திரை சென்று சிக்கி தவிப்பவர்களில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 290 பக்தர்களும் உள்ளனர். தொடர்ந்து மழை பெய்வதாலும், பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாலும் மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.

    சென்னையில் இருந்து ஏற்கனவே அங்கு யாத்திரை சென்ற குழுவில் இடம் பெற்று இருந்த சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த ஒருவர் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதேபோல் கேரளாவைச் சேர்ந்த லீலா மகேந்திர நாராயணன் (வயது 56) என்பவர் சிமிகோட்டில் இறந்து விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    தமிழக பக்தர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார். 
    ×